pig farming

Register

C

contactbabu

Guest
pig farm at tamilnadu

வங்கிகள், மற்றும் நிதிநிறுவன விளம்பரங்களில் பன்றி வடிவ உண்டியல் படம் ஒன்றைப் பார்த்திருப்பீர்கள். பன்றி ÔவதவதÕவென குட்டிப்போடுவது போல, நீங்கள் சேமிக்கும் பணமும் சடசடவென பெருகி வளரும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் அந்த விளம்பரத்தில்.

அது கிடக்கட்டும். பணத்தை உண்டியலில் போடாமல்.... நிஜமாக நீங்கள் பன்றிகளை வளர்த்தால்...? உங்கள் பணம் ÔகொழுகொழுÕவென வேகமாக வளரும் என்கிறார்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் சிலர். ஆம்... பன்றி வளர்ப்பு என்பது பணம் கொழிக்கும் பக்காவான தொழில்களில் ஒன்றாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

உள்ளூர் சாக்கடைகளில் திரியும் பன்றிகளைப் பார்த்து அருவருப்புப்பட்டே பழகிப்போன உங்களுக்கு... என்னது பன்னி வளக்கறதா? என்று அச்சம் எழக்கூடும். ஆனால், அவர்கள் சொல்ல வருவது வெண்பன்றி! வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஆடு, மாடுகளைப் போல வீட்டில் வளர்க்கக் கூடிய பிராணியாக இருக்கும் வெண்பன்றியை... ஆடு, மாடு, கோழிகளுக்கு இணையான ஏன் அதைவிட மேலான இறைச்சியாகவே பார்க் கிறார்கள். அதேபோல நம் நாட்டிலும் வெண்பன்றி இறைச்சியை சாப்பிடுவது பிரபலமடைந்து வருகிறது. இதன் காரணமாகவே வெண்பன்றி வளர்ப்பு தற்போது சுறுசுறுப்பாகியுள்ளது. சத்தம் இல்லாமல் சில விவசாயிகள் இதில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகா, நாச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. பரம்பரை விவசாயியான இவர், கடந்த நான்கு வருடங்களாக வெண்பன்றி வளர்த்து வருகிறார். ஒரு பக்கம் விவசாயம்... இன்னொரு பக்கம் அதன் உபதொழிலாக வெண்பன்றி வளர்ப்பு... என்று ஆரம்பித்தவர், தற்போது விவசாயத்தை உபதொழிலாக பார்க்கும் அளவுக்கு பன்றி வளர்ப்பில் முன்னேறி இருக்கிறார்.

‘‘எனக்குப் பத்து ஏக்கர்ல வெவசாயம். அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன தண்ணி இல்லாம வெவசாயம் நசிஞ்ச நேரத்துல தலச்சேரி ஆடுகளை வாங்கி வளர்த்தேன். எனக்கு தெரிஞ்ச Ôஇன்ஜினீயர்Õ சீனிவாசன், எல்லாரையும் போல ஆடு, மாடு வளக்கறத விட்டுட்டு, வெள்ள பன்னியை வாங்கி வளத்துப் பாரேன். நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குனு சொன்னாரு. அதுல ஏதோ விஷயம் இருக்கற மாதிரி பட்டுச்சி. உடனே வெள்ளப் பன்னி வளக்கறதைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன்.

ராமநாதபுரத்தில் இருக்கற கால்நடை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக கிளைக்குப் போய் முறையா பயிற்சி எடுத்துக் கிட்டேன். அதை முடிச்சதும், மதுரை விவசாய காலேஜுல போய், 15 வெள்ள பன்னிக் குட்டிங்க வாங்கிகிட்டு வந்து, எங்க தோட்டத்துலயே பண்ணையை ஆரம்பிச்சேன். கொறஞ்ச செலவுல தென்னை ஓலைக் குடிசையிலதான் முதல்ல ஆரம்பிச்சேன். தோட்டத்துல கிடைக்கிற கழிவுகள், பக்கத்தில இருக்கிற மில்லு கேன்டீன் கழிவுகள்னு கிடைக்கிறத தீவனமா கொடுத்தேன். எதையும் காசு கொடுத்து வாங்கல.

குட்டிக நல்லா வளர்ந்து நிக்கற நிலையில, என்னைப் போலவே அந்தப் பல்கலைக் கழகத்தில பயிற்சி முடிச்சவங்க வந்து, வளக்கறதுக்காக குட்டி வேணும்னு கேட்டாங்க. எல்லா குட்டியும் அவங்ககிட்டயே வித்துப்போச்சி. அதுக்குப் பிறகு, பல ஊர்கள்ல இருந்தும் ஆர்டர்கள் வருது. நான் பண்ணையை ஆரம்பிச்சது என்னவோ... கறிக்காகத்தான். ஆனா, குட்டியாவே வித்துப் போயிடுது.

தீபாவளி மாதிரியான விசேஷ நாளுக்காக சில குட்டிகளை தனியா வளர்த்து, நானே கசாப்பு போடுவேன். ஆரம்பத்துல பன்னி கறியை வாங்க மக்கள் ரொம்பவே யோசிச்சாங்க. இப்ப, முதல் நாளே காசைக் கொடுத்து டோக்கனை வாங்கிட்டு போற அளவுக்கு நிலைமை மாறியிருக்கு. ‘எனக்கு, உனக்கு’னு அரை மணி நேரத்துல காத்தா பறந்துருது கறி. சாப்பிட்டுப் பழகிட்டாங்கனா மனசு திரும்பத் திரும்ப தேட ஆரம்பிச்சுடும்.

ஆரம்பத்துல Ôபன்னி வளக்கப் போறேன்Õனதும், ஊர்ல பலரும் என்னைக் கேவலமா பாத்தாங்க. இன்னிக்கி இதுல நாலுகாசு வருதுனு தெரிஞ்சதும் ஆச்சர்யமா பாக்கறாங்க. தொழில் ஓரளவு வளந்துடுச்சி. பேங்க்ல லோன் வாங்கி, பெரிய ஷெட் போட்டு பன்னிகளை வளக்கறேன். கூலியாளு யாரையும் வெச்சிக்காம எங்க வீட்டு ஆளுகளே எல்லா வேலையும் செய்றதால கூடுதல் லாபம் என்று தன் அனுபவத்தைச் சொல்லியவர், பன்றி வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஆலோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

“புதுசா பண்ணை ஆரம்பிக்கிறவங்க நாலு பொட்டை, ஒரு கிடானு வாங்கி சின்ன லெவல்ல ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா முன்னுக்கு வரணும். குட்டிகள் வாங்க... கூரை ஷெட் போட... அதுக்கு தரை ஏற்பாடு பண்ண இதுக்கெல்லாம் முப்பதாயிரம் ரூபாய் இருந்தா போதும். அதுக்கு மேல போகாம பார்த்துக்கணும். எட்டுக்கு எட்டு சைஸ்ல அஞ்சாறு அறைகள் இருக்கிற மாதிரி ஷெட் அமைக்கணும்.

காய்கறி மார்க்கெட் கழிவு, ஓட்டல் கழிவு, தோட்டத்துல கிடைக்கற செடி, கொடி, புல்லு இப்படி எது கிடைக்குதோ அதையெல்லாம் தீவனமா போடலாம். தனியா தீவன பயிர் வளக்கற அளவுக்கு நிலமிருந்தா குதிரை மசால், வேலி மசால், அகத்தி கீரை, சூபா புல் இதையெல்லாம் கூட வளர்த்து தீவனமா கொடுக்கலாம். புளிய விதையை லேசா வறுத்து போட்டா நல்லா சாப்பிடும்ங்க.

சொந்தமா கசாப்பு போட்டும் விக்கலாம். இல்லனா... கேரள வியாபாரிங்க டன் கணக்குல வந்து வாங்கிக்கிட்டு போறாங்க. அவங்கிட்டயும் விக்கலாம். நேரடியா விற்க நினைச்சா... கேரளாவுல கூத்தாட்டுக்குளம்ங்கற இடத்துல இருக்கற இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்துலயும் கொண்டு போய் கொடுக்கலாம். எடை போட்டு கையில பணத்தைக் கொடுத்துடறாங்க என்று சொன்ன பெருமாள் சாமி,

மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருக்கும் கால்நடைப் பராமரிப்பு துறை பொறுப்பாளர் டாக்டர். பால் பிரின்சி ராஜ்குமாரைச் சந்தித்து, வெண்பன்றி வளர்ப்புக்கு இருக்கும் வரவேற்பு மற்றும் வாய்ப்புகள் பற்றிக் கேட்டோம்.

‘‘சென்னை, சேலம், ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட எல்லா இடத்திலேயும் வெண்பன்றி இறைச்சி கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதன் தேவை இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தற்போதே சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பச்சைக் கொடி காட்டியவர்,

கழிவுகளை தின்று, குறைந்த நாளில் அதிக எடையுடன் வளருவது வெண் பன்றி மட்டுமே. ‘கழிவுகளைக் கறியாக்கும் (காசாக்கும்) இயந்திரம்’ என்று கூட அதைச் சொல்லலாம். மாதம் சராசரி பத்து கிலோ வரை எடை கூடும். ஒரு வருடத்தில் நூறு கிலோ வரை எடை கிடைக்கும். நூற்றிப் பதினான்காவது நாளில் சினை பருவம் தொடங்கும். சினை பருவத்திலிருக்கும் பன்றிக்கு கலப்புத் தீவனம் கொடுப்பது சிறந்தது. தலை ஈத்தில் (முதல் பிரசவத்தில்) ஆறு முதல் எட்டு குட்டிகள் வரை ஈனும். போகப்போக பன்னிரண்டு குட்டிகள் வரை போடும். பிறந்த குட்டிகளை கவனமாகப் பாத்துக் கொள்ள வேண்டும். குட்டிகள் பால் குடித்து முடித்ததும் தாயிடமிருந்து பிரித்து தனியாக விட்டு விடவேண்டும். ரத்தச் சோகை, அம்மை, காய்ச்சல் இதெல்லாம் தாக்காமல் தடுப்பூசி போடவேண்டும்.

இரண்டாவது மாதத்தில் பால்குடி மறந்ததும் தாயிடம் இருந்து ஒட்டுமொத்தமாக குட்டிகளை பிரித்து விட வேண்டும். மூன்றாவது மாதத்துக்குப் பிறகு குட்டிகளை விற்பனை செய்தால் சராசரியாக குட்டி ஒன்று ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். சந்தையில் வெண்பன்றி இறைச்சி கிலோ எண்பது ரூபாயிலிருந்து, நூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வெண்பன்றி வளர்ப்புக்கான பயிற்சி இலவச மாகவும், வளர்ப்புக் குட்டிகள் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கும் எங்கள் கல்லூரியிலேயே கிடைக்கிறது. வெண்பன்றி இனங்களில் பெரிய வெள்ளை யார்க்ஷயர், பெர்க்ஷயர், லாண்ட் ரே, டியூராக், ஷாம் ஷயர், டாம் ஒர்த் உள்பட பல வகைகள் உண்டு. இதில் யார்க்ஷயர் இனத்தைத்தான் வளர்ப்புக்கு அதிகமாகப் பயன்படுத் துகின்றனர் என்று பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களை விரிவாகச் சொன்னார் ராஜ்குமார்.

Ôசெய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம் என்ற எண்ணம் கொண்டோருக்கு வெண்பன்றி வளர்ப்பு பணம் கொழுக்கும் தொழில் என்பதில் சந்தேக மில்லை!

நன்றி : விகடன்

with regards
BAbu
 

Top